ரத்த கழிச்சல் நோயில் இருந்துஆடுகளை பாதுகாப்பது எப்படி?
ரத்த கழிச்சல் நோயில் இருந்து ஆடுகளை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 3 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 2 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 5 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும்.
காற்று மணிக்கு முறையே 14, 18 மற்றும் 16 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும், அதிகபட்சமாக 90 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில், மாடு மற்றும் ஆடுகளில் குட்டி ஈனுவது மழைக்காலங்களில் அதிகமாக காணப்படும். பொதுவாக கன்று ஈனும்போது, பிறப்பு உறுப்புகளில் சிறு காயங்கள் ஏற்படும். மேலும் திசுகழிவுகள் புழுப்புண்களை ஏற்படுத்தும் ஈக்களை கவர கூடியது ஆகும். அதனால் புழுப்புண் ஏற்படாமல் தடுக்க பிறப்பு உறுப்பு மற்றும் வேறு இடத்தில் காயம் ஏற்பட்டால், வேப்ப எண்ணெய் அல்லது ஈ விரட்டும் களிம்புகளை தடவலாம்.
ரத்த கழிச்சல் நோய்
இதேபோல் ஆடுகளில் ரத்த கழிச்சல் நோய் ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. குறிப்பாக சுகாதாரமற்ற சூழலில் சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் அடைத்து வளர்க்கப்படும் குட்டிகளில் ரத்த கழிச்சல் நோய் அதிகமாக காணப்படும். முதிர்ந்த ஆடுகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டாலும், நோய் அறிகுறிகளை காட்டாது. ஆனால் சாணத்தில் எய்மீரியா ஒட்டுண்ணியின் உறை முட்டைகளை தொடர்ந்து வெளியேற்றுவதன் மூலம் இளம் குட்டிகளுக்கு நோய் பரவ காரணமாக இருக்கிறது.
எனவே பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சல்பா மற்றும் ஆம்ரோலியம் மருந்துகளை கொடுக்கலாம். சுகாதாரமான பண்ணை பராமரிப்பு குட்டிகளை குறைவான எண்ணிக்கையில் பெரிய ஆடுகளில் இருந்து பிரித்து வளர்ப்பதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.