பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-27 21:19 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும், உபரிநீராக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 500 கன அடியும், உபரிநீராக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாகவே நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்