சனி, ஞாயிறுகளில் மட்டும்...! மணமகளிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகனின் நண்பர்கள்

சனி, ஞாயிறுகளில் இதற்கு மட்டும் கிர்க்கெட் விளையாட அனுமதிக்கனும்... மணமகளிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெற்ற மணமகனின் நண்பர்கள்;

Update: 2022-09-10 08:39 GMT

உசிலம்பட்டி:

இன்றைய நவீன காலகட்டத்தில் திருமணத்துக்கு பின் கணவன்-மனைவியின் வாழ்க்கை முற்றிலும் மாறி விடுகிறது. குறிப்பாக திருமணத்திற்கு பின் வாலிபரின் நட்பு வட்டார பழக்கங்கள் குறைந்து விடுகின்றன.

இந்த நிலையில் திருமணத்துக்கு பின்னும் மணமகனை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டுமென அவரது நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து பெற்ற சம்பவம் வியப்பு கலந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விபரம் வரமாறு:-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவர் தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் கிரிக்கெட் வீரரான இவர் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் என்ற அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் ஹரிபிரசாத்துக்கும், தேனியை சேர்ந்த பூஜா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருமணத்தின் போது பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை சந்தித்து திருமணத்திற்கு பின்னரும் ஹரிபிரசாத்தை கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பது என்ற ஒப்பந்த பத்திரத்தை மணமகள் பூஜாவிடம் கொடுத்து கையெழுத்து பெற்றனர்.

இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்த உறவினர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு பின்னர் மணமகன் விளையாட்டுகளில் கலந்து கொள்ள மனைவிமார்கள் ஒரு சில சமயம் தடுக்கும் சூழலில் மணமகனின் நண்பர்களின் இந்த சம்மத ஒப்பந்த பத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்