பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் அடிக்கடி விபத்து: தார் சாலை அமைக்கக்கோரி கொட்டும் மழையில் பொதுமக்கள் மறியல்
பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும். தார் சாலை அமைக்கக்கோரியும் கொட்டும் மழையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட முத்தோப்பு அகரம்பாட்டை பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் விரைந்து முடிக்கப்படாமல் மந்தகதியில் நடந்து வருகிறது. இதன் காரணமாக தோண்டப்பட்ட அந்த பள்ளம் இன்னும் மூடப்படவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் அவ்வழியாக சைக்கிளில் சென்ற சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நிலைதடுமாறி, அந்த பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடப்பதால் அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அடிக்கடி விழுந்து காயமடைந்து வருவதால் இப்பணிகளை விரைந்து முடித்து பள்ளத்தை மூடி தார் சாலை அமைக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் இரவு 8.20 மணியளவில் திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில், பொதுமக்கள் மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நகராட்சி அதிகாரிகளிடம் பேசி பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள், இரவு 8.45 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.