போதைப்பொருள் விற்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும்: முதல்-அமைச்சர் உத்தரவு

போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-08-11 00:35 GMT

சென்னை,

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இது தொடர்பாக ஆலோசிக்க சென்னை கலைவாணர் அரங்கில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அரசு துறை செயலாளர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

போதைப்பாதையைதடுக்கவேண்டும்

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்காக அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதை நினைக்கும்போது கவலையும், வருத்தமும் கூடவே செய்கிறது. கடந்த ஆட்சியில் இதுபற்றி போதிய கவனம் செலுத்தாமல் விட்டது காரணமாக இந்த சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னாலும், நாம் இதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம் என்பது மட்டுமே இப்போது எனக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு ஆறுதல். அழிவுப்பாதையான போதைப்பாதையை, நமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும்.

அதற்கான உறுதியை எடுத்தாக வேண்டும். போதை மருந்துகள் நம் மாநிலத்துக்குள் நுழைவதை, பரவுவதை, விற்பனையாவதை, பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துபவர்களை அதில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்தியாக வேண்டும்.

புதிதாக ஒருவர் கூட இந்த போதை பழக்கத்துக்கு ஆளாகிவிடாமல் முனைப்புடன் இளைஞர் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும். இந்த உறுதியை கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளேன். நீங்கள்தான் அந்த உறுதியை எனக்கு வழங்க வேண்டும்.

முற்றிலுமாக தடுக்க...

போதைப்பொருள் நடமாட்டத்தில் குஜராத், மராட்டியத்தை விட தமிழகம் குறைவுதான் என்று நான் சமாதானம் அடைய தயாராக இல்லை. ஒரு சிறு துளி இருந்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் என்பது நடமாட்டம்தான். ஒருவர் அதற்கு அடிமையானாலும், அது அவமானம்தான்.

போதைப்பொருள் என்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு சமூகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதுதான் காரணம். ஒருவர் போதையை பயன்படுத்தி விழுந்து கிடப்பதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்கக்கூடாது. போதைப்பொருள்தான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.

சமூகத்தீமை

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்தல் என்பது கூட்டு நடவடிக்கை. போதைப்பொருள் பழக்கம் என்பது ஒரு சமூகத்தீமை. ஆகவே இந்த சமூகத்தீமையை அனைவரும் சேர்ந்துதான் தடுத்தாக வேண்டும்.

போதை மருந்தை பயன்படுத்துபவர் அதில் இருந்து விடுபட வேண்டும். விடுபட்டவர், போதை பயன்பாட்டுக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போதைப்பொருள் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. இதே பணி கல்லூரிகளின் நிர்வாகத்துக்கும் இருக்கிறது.

போதைப்பொருள் இல்லாத தமிழகம்

போதையில் விழுந்தவர்களை மீட்கும் பணியை சமூகநல அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்தாக வேண்டும். போதையில் இருந்து மீள்பவர்களுக்கு மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும்.

இவ்வளவு காரியங்களை ஒரு சமூகம் மொத்தமும் செய்தாக வேண்டும். அப்படி ஒருசேர அந்த சமூகம் இயங்கினால்தான், போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க முடியும்.

முதலில், "எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்துவிட்டேன்" என்று உங்கள் எல்லையில் உள்ள ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக்கொண்டால் போதும், அதுவே முதல் வெற்றி. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் "போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு" போலீஸ் சூப்பிரண்டு பதவி உருவாக்கப்பட்டு, இந்த பிரிவு வலுப்படுத்தப்படும். அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு மாநில எல்லைப்புற மாவட்ட அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் எல்லைப்புற சோதனைச்சாவடிகளை வலுப்படுத்த வேண்டும். தேனி, திண்டுக்கல் போன்ற மலையடிவார பகுதிகள், மறைவான இடங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில், இதர பயிர்களுக்கு இடையில் கஞ்சா பயிரிடுவதற்கு வாய்ப்புள்ள காரணத்தினால், மலையை ஒட்டி அமைந்திருக்கும் வேளாண் நிலங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனைகள் செய்ய வேண்டும்.

கண்காணிப்பு

சாதாரண பயணிகள் மூலமாகவும், கூரியர் வழியாகவும் போதைப்பொருள் வருவதாக சொல்லப்படுகிறது. பயணிகள் பஸ்களை கண்காணிக்க வேண்டும். கூரியர் நிறுவனங்களுக்கு இதுகுறித்த எச்சரிக்கை கடிதத்தை அனுப்பிவைக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். ஆயத்தீர்வைத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, புலனாய்வுத்துறை, சுங்கத்துறை, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் காவல்துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

போதைப்பொருள் தயாரிப்பில் முக்கிய நபர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை சமூகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் விற்பனை அதிகம் நடைபெறும் இடங்களை பட்டியலிட்டு, அங்கு கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். கருப்பு பட்டியல் கிராமங்கள், பகுதிகள் என வகைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் 'வாட்ஸ்-அப்', 'டெலிகிராம்' போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களுக்கென தனிக்குழுக்களை ஏற்படுத்திக்கொண்டு, அதில் பள்ளி மற்றும் மாணவர்களை இணைத்து விற்பனை செய்துவருவதாக தகவல்கள் இருக்கிறது. இதனை நுண்ணறிவு காவல்துறையினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

சொத்துகள் முடக்கம்

வியாபாரிகளும், கடைக்காரர்களும் போதைப்பொருளை விற்க மாட்டேன் என உறுதி எடுக்க வேண்டும். போதைப்பொருட்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகே விற்பனையாகாமல் கண்காணிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகமானது, தனது எல்லைக்குள் இப்பொருட்களின் நடமாட்டத்தை தடுத்தாக வேண்டும். காவல் நிர்வாகமானது, போதை பொருட்களை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும். போதைப்பொருள் விற்கும் வியாபாரிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்தாக வேண்டும். அவர்களது மொத்த சொத்துகளும் முடக்கப்பட வேண்டும்.

கட்டணமில்லா தொலைபேசி எண்

கல்வி நிறுவனங்களில் உள்ள விடுதிகளை கண்காணிக்க வேண்டும். அந்த நிறுவனங்களின் 'வார்டன்'களை அழைத்து பேசி, அவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்க வேண்டும். போதைப்பொருள் தொடர்பான ரகசிய தகவல்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தெரிவிக்கக்கூடிய வகையில் தனியாக ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்க வேண்டும்.

போதைப்பொருள் குற்றங்களை செய்தவர்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு என்.டி.பி.எஸ். சட்டத்திலே (பிரிவு 37) கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அரசு வக்கீல்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் உடனே ஜாமீனில் செல்வதை தடுத்து நிறுத்துங்கள். பள்ளிகள், கல்லூரிகள், சமூக கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் விற்பதற்கு எதிராக அதிகபட்ச தண்டனை வழங்க இந்த சட்டத்தின் 32பி (டி) பிரிவை முழுமையாக பயன்படுத்துங்கள்.

போதைப்பொருள் தடுப்பில் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. ஆகவே, இந்த பிரிவுக்கு தனியாக ஒரு "சைபர் செல்" (சைபர் பிரிவு) உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்