ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு கணக்கு நிர்வாக பணிக்கான இலவச பயிற்சி
ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு கணக்கு நிர்வாக பணிக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.;
பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் கணக்கு நிர்வாக பணிக்கான இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.
பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
இந்த பயிற்சியில் சேர 22 முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி வகுப்பு 20 நாட்கள் நடைபெறும். மேலும், சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதிகள் மேற்கொள்ளப்படும். பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்கள் நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீடு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
மாதம் ரூ.25 ஆயிரம் முதல்...
மேலும், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் தனியார் வங்கி நிறுவனங்களில் கணக்கு நிர்வாக பணியில் சேர வேலைவாய்ப்புக்கு வழிவகைச் செய்யப்படும். இப்பணியில் ஆரம்பகால மாத சம்பளமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உள்பட) தாட்கோ சார்பில் வழங்கப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சியில் சேர விருப்பமுடையவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.