100 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்:கனிமொழி எம்.பி. வழங்கினார்
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 100 ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை கனிமொழி எம்.பி வழங்கினார்.
தூத்துக்குடியில் நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 100 ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை கனிமொழி எம்.பி வழங்கினார்.
தையல் எந்திரம்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு என்.பெரியசாமி அறக்கட்டளை மற்றும் மாவட்ட மகளிர் திட்டம் இணைந்து தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பஞ்சாயத்து பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 32 பெண்களுக்கு 40 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பெண்களுக்கு சான்றிதழ்களுடன், இலவச தையல் எந்திரங்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்ற 68 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் ஆக மொத்தம் 100 ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு 100 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை வழங்கி பேசினார்.
பாதுகாப்பு
அப்போது, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண்களுக்கு தையல் எந்திரம் மட்டுமல்ல, அவர்களுக்கு தையல் பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வினருக்கு கோட்டை தி.மு.க இயக்கம் தான். மக்களுக்காக, சமூக நீதிக்காக ஒரு அரணாக, கோட்டையாக தி.மு.க.வை உருவாக்கியவர் கருணாநிதி. பெண்கள் வாழ்க்கையில் உயர வேண்டும், உரிமைகளை பெற வேண்டும், சொந்த காலில் நிற்க வேண்டும், யாருக்கும் அடங்கி வாழும் அவசியம் இல்லாமல் சமமாக வாழ வேண்டும், சட்டரீதியாக பாதுகாப்பு பெற்றவர்களாக வாழ வேண்டும் என கனவு கண்டார். அதற்காக சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டியவர் தான் நம் தலைவர் கருணாநிதி.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு திருமண உதவி திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இலவச சமையல் எரிவாயு அடுப்பு, இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி என்று பெண்களுக்கு தலைவர் நிறைவேற்றிய திட்டங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். தலைவர் வழியில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். தலைவர் ஆட்சியின் நீட்சியாகவே இந்த ஆட்சி தொடருகிறது. தலைவர் நூற்றாண்டை ஓராண்டு காலம் கொண்டாட முடிவு செய்து உள்ளோம். மக்களுக்கு பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி இந்த விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாற்று கட்சிகளை சேர்ந்த 50 பேர் கனிமொழி எம்.பி. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து கனிமொழி எம்.பி வரவேற்றார்.