கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு திட்ட பயனாளிகளுக்கான பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி, அரியமங்கலம், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய 3 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமை தாங்கினார்.
மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி நிதிக்குழு தலைவர் முத்துச்செல்வம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
முகாமில் பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் அரசு ஆஸ்பத்திரி டீன் நேரு, கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் பல்வேறு துறை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து, ஆலோசனைகளை வழங்கினர். மேலும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியவற்றில் பதிவு செய்யாதவர்களுக்கு முகாமில் பதிவு செய்யப்பட்டது. முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.