ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு இலவச ஆரம்பநிலை சிசு வளர்ச்சி பரிசோதனை

மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்தியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப நிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் இலவச பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.;

Update:2023-03-15 11:51 IST

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் ரூ.1,000 முதல் ரூ.4 ஆயிரம் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் நாள் தோறும் 60-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தை போலவே கர்ப்பிணி பெண்களுக்கு என்று தமிழகத்தில் வேறு எந்த அரசு ஆஸ்பத்திரிகளிலும் இல்லாத வகையில், கருவில் உள்ள சிசுவின் ஆரம்ப நிலை வளர்ச்சியை கண்டறியும் பரிசோதனைத் திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. ரூ.1,000, ரூ.2 ஆயிரம் ஆகிய 2 வகைகளில் கட்டணங்களை செலுத்தி பரிசோதனைகள் செய்துகொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு உள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உபகரணம் மூலம் சிசுவுக்கு மரபணு ரீதியான பாதிப்பு உள்ளதா என்பதை அறியும் 'டபுள் மார்க்கர்' சோதனையும், சிசுவின் முதுகெழும்பு, மூக்கு, கழுத்து பகுதி மற்றும் ரத்த ஓட்டம் ஆகியவற்றின் வளர்ச்சி குறித்தும் கண்டறிய முடிகிறது. இந்தநிலையில், தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, கருவில் உள்ள குழந்தையின் நலன் குறித்து விழிப்புணர்வை கர்ப்பிணி பெண்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆஸ்பத்திரிகளில் பேறுகால சிகிச்சை பெறும் 100 பெண்களுக்கு இலவசமாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும் திட்டத்தை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர்.ஆனந்தகுமார் கூறியதாவது:-

கர்ப்பிணி பெண்களுக்கு 11 முதல் 14 வாரங்களுக்கு மேற்கொள்ளப்படும் ஆரம்ப நிலை சிசு வளர்ச்சி பரிசோதனையை இலவசமாக மேற்கொண்டு வருகிறோம். மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். வசதி படைத்தவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்தி இந்த பரிசோதனையை செய்து கொள்கிறார்கள். ஆனால், ஏழை, நடுத்தர கர்ப்பிணி பெண்களுக்கு இதுபோன்ற பரிசோதனை செய்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தை மரபணு பிரச்சினை இல்லாமல் வளர்கிறதா என்பதை கண்டறிய முடியும்.

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்தியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிசுவின் வளர்ச்சியை கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி, மரபணு பரிசோதனைக்கான அனலைசர் பகுப்பாய்வு கருவியை ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கொள்முதல் செய்துள்ளோம். இலவச திட்டத்தின் மூலம் கடந்த 4 நாட்களில் 16 பேருக்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனையை மேற்கொள்ளவே தனியாக ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் உள்ளிட்ட 6 பேரை நியமித்து உள்ளோம். இந்த திட்டம் தொடங்கப்பட்ட 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 200 பேர் வரை மட்டுமே பயனடைந்து உள்ளார்கள். மேலும், இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். இந்த திட்டம் குறித்த மேலும் தகவல்களுக்கு 73388 35555 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலவச திட்டத்தின் கீழ் பயனடைந்த சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்த பத்மினி ராமச்சந்திரன் கூறுகையில், 'தனியார் ஆஸ்பத்திரிகளில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய ரூ.6 ஆயிரம் வரையில் கேட்கிறார்கள். ஆனால், இங்கு இலவசமாக பரிசோதனை செய்துள்ளார்கள். டாக்டர்களும், நர்சுகளும் எங்களிடம் மிகவும் அன்புடன் நடந்துகொள்கிறார்கள். எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதுகுறித்து அனைத்து பெண்களிடமும் விழிப்புணர்வு வர வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்