176 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
உவரியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 176 பேருக்கு சபாநாயகர் அப்பாவு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
திசையன்விளை:
உவரியில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 176 பேருக்கு சபாநாயகர் அப்பாவு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
மனுநீதிநாள் முகாம்
திசையன்விளை அருகே உவரியில் நேற்று மனுநீதிநாள் முகாம் நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், பயிற்சி கலெக்டர் ஷீஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உவரி பஞ்சாயத்து தலைவர் தேம்பாவனி வர வேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகா் அப்பாவு கலந்து கொண்டு, 176 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். முன்னோடி மனுநீதி நாளில் பெறப்பட்ட 386 மனுக்களில் 246 மனுக்கள் தீர்வு காணப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ், திசையன்விளை சமூகநலதிட்ட தாசில்தார் பத்மபிரியா, துணை தாசில்தார் ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் நக்கீரன், வருவாய் ஆய்வாளர் மகேந்திரன், கரைசுத்து உவரி பஞ்சாயத்து தலைவர் கவிதா ராஜன், துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி, இளநிலை மின்பொறியாளர் கார்த்தி மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில், திசையன்விளை தாசில்தார் முருகன் நன்றி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
நாகர்கோவிலில் இருந்து புறவழிச்சாலை வழியாக நெல்லைக்கு இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களும் பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி, நாங்குநேரி ஊருக்குள் வந்து செல்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் வள்ளியூர் பயணியர் விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சபாநாயகர் மு.அப்பாவு தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், இந்த பிரச்சினை கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதை நானும் அறிவேன். பணகுடியைப் பொறுத்தவரையில் நேர கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு பணகுடி ஊருகுள் வந்து செல்லக்கூடிய பஸ்களை வரிசைப்படுத்தி பட்டியல் தயார் செய்து அதன்படி பஸ்கள் பணகுடி ஊருக்குள் வந்து செல்கிறதா என்பதை நேர கண்காணிப்பாளர் கவனித்து வருகிறார். இதேபோன்று வள்ளியூர், ஏர்வாடி, நாங்குநேரி பேருராட்சிகளிலும் நேர கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு பேரூராட்சி பஸ்நிலையத்திற்கு வந்து செல்லக்கூடிய பஸ்களை வரிசைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும"் என்றார்.
கூட்டத்தில் நெல்லை போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் மோகன், மதுரை போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், செயலாளர் ராஜ்குமார், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைச் செயலாளர் காதர்முகைதீன், வள்ளியூர் பேரூராட்சி துணைத் தலைவர் நீ.கண்ணன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் நம்பி, பணகுடி பேரூராட்சி துணைத் தலைவர் புஷ்பராஜ் மற்றும் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், ம.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.