கால்நடைத்துறை சார்பில் 1,400 பேருக்கு இலவச ஆடுகள்
ஈரோடு மாவட்டத்தில், கால்நடைத்துறை சார்பில் 1,400 பேருக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட உள்ளதாக மண்டல இணை இயக்குனர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில், கால்நடைத்துறை சார்பில் 1,400 பேருக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட உள்ளதாக மண்டல இணை இயக்குனர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
ஆடுகள் வழங்கும் திட்டம்
கால்நடை துறை சார்பில், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக ஆடு, கோழி போன்றவை முழு மானியத்திலும், கறவை மாடு வாங்க மானியமும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,400 பேருக்கு ஆடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:-
இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியத்தில் தலா 100 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட உள்ளது. இதில் 4 பெட்டை ஆடுகள், ஒரு கிடா என 5 ஆடுகள் வழங்கப்படும். ஒரு ஆடு ரூ.3 ஆயிரத்து 500 என்ற விலையில் கொள்முதல் செய்து பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
பயனாளிகள் தேர்வு
இந்த ஆடுகள் முழு மானியத்துடன் இலவசமாக வழங்கப்படுகிறது. பயனாளிகளின் பங்குத்தொகை என ஏதுமில்லை. கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற நலத்திட்டங்களில் பயன்பெறாத, ஆடு வளர்க்க மேய்ச்சல் இட வசதி உள்ளவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்கள், இலவச ஆடுகள் வழங்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மலைப்பகுதி, பிற பகுதி என இல்லாமல், அரசு அறிவித்துள்ள விதிப்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி விரைவில் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைப்பார். இந்த ஆண்டில் கறவை மாடு, கோழி வழங்கும் திட்டம் பற்றி அரசு இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.