1,993 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் 1,993 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் 1,993 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
இலவச மின் இணைப்பு
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் கோணாப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. மின்வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
1,993 விவசயிகளுக்கு...
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார். அதன்படி 2021-22-ம் நிதியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 675 விவசாய மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 1,203 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
2022-23-ம் நிதியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 1,242 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 790 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மின் இணைப்புகள் அடுத்த 60 நாட்களில் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய மின் மாற்றி
மேலும், திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் 1,814 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், திருப்பத்தூர் மின் கோட்டத்தில் 1,170 விவசாய மின் இணைப்புகளும், திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் 1,770 மின் இணைப்பு வழங்கவும் மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட கோணாப்பட்டு கிராமத்தில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், 63 கே.வி. திறன் கொண்ட ஒரு மின்மாற்றி அமைக்கப்பட்டு இன்று (நேற்று) முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மின்மாற்றியில் இருந்து விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 632 உயர் மற்றும் குறைந்த மின் அழுத்த மின் மாற்றிகள் அமைக்க சுமார் ரூ.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச மின் இணைப்பு பெறும் விவசாயிகள் மின்சாரத்தை உரிய முறையில் பயன்படுத்தி உழவுப்பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
இதையடுத்து, புத்தகரம், கொரட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மின்கோட்ட செயற் பொறியாளர் அருள் பாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், பிரபு, சந்தானம்., முஸ்தபா, சோமு, பிரேம், மனோஜ் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.