அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி
வீரபாண்டி
இடுவம்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
விலையில்லா மிதிவண்டிகள்
தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருப்பூர் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்புரை வழங்கினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியன், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார், 4-ம் மண்டலம் தலைவர் இல.பத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் வழங்கினார்
இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அரசு மேல்நிலைப் பள்ளிகள், நகரவை மேல்நிலைப்பள்ளிகள், நிதி உதவி பெறும் பள்ளிகள், பகுதியாக உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 94 பள்ளிகள் பயன் பெறுகின்றன. 6 கோடியே 81 லட்சத்து 42 ஆயிரத்து 620 ரூபாய் செலவில், 5,871 மாணவர்களுக்கும், 8272 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 143 பேருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.