திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இலவச இணைப்பு- அமைச்சர் தகவல்

திருச்செந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இலவசமாக இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2023-05-25 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகராட்சி சார்பில் பகத்சிங் பஸ்நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட்டில் ரூ.3.96 கோடி செலவில் 148 கடைகள், ரூ.2.75 கோடி செலவில் அறிவுசார் மையம் மற்றும் ரூ.3.5 கோடி செலவில் நகராட்சி அலுவலகம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணியை தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூடன் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர்கள் ஜீவாநகர் மற்றும் தோப்பூர் சாலையில் உள்ள ஆவுடையார்குளம் மறுகால் ஓடையினையும் பார்வையிட்டனர்.

ஆய்வுக்கூட்டம் 

பின்னர் திருச்செந்தூர் நகராட்சி கூட்ட அரங்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், திருச்செந்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் அடிப்படை பணிகள், குடிநீர் தேவை மற்றும் பாதாள சாக்கடை திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திருச்செந்தூரை சுத்தமான நகரமாக மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதன் பேரில் தற்போது அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருச்செந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற வீட்டுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற நிலையை மாற்றி சுமார் 4,000 வீடுகளுக்கு இலவசமாக இணைப்பு வழங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பாதாள சாக்கடை திட்டத்தில் உணவகங்கள், வணிக வளாகங்களையும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வீடுகளில் இருப்பவர்கள் எவ்வித அச்சமின்றி பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு முன்வர வேண்டும். இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, அந்த நீர் ஆலந்தலை அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான 85 ஏக்கர் பரப்பில் உள்ள பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அதில் நகராட்சி மூலம் ரூ.90 லட்சம் மதிப்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புற்கள் வளர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காய்கறி மார்க்கெட்

காய்கறி மார்க்கெட்டில் 148 கடைகள் கட்டப்பட்டு பணிகள் முடிந்துள்ளது. அதேபோல் மீன், இறைச்சி சந்தைகளுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி அலுவலகமும் கட்டப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மற்றும் எல்லப்பநாயக்கன் குளங்களின் மறுகால் ஓடை சீரமைக்கும் பணிக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூர் கோவிலுக்கு புறவழிச்சாலை சாலை அமைப்பதற்கு ஆய்வு பணிகளுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆய்வுப்பணிகள் முடிந்து விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

திருச்செந்தூர் நகராட்சிக்கு ஏற்கனவே 3 பகுதிகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஆற்று நீர் வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. எனவே பொன்னாங்குறிச்சியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூரில் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.350 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவர நிதியினை பெற்று திட்டத்தினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்