245 சிவில் நீதிபதி பதவிகளுக்கான எழுத்துத்தேர்வுக்கு இலவச பயிற்சி -சைதை துரைசாமி அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்துடன் இணைந்து 245 சிவில் நீதிபதி பதவிகளுக்கான எழுத்துத்தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் என்ற மனிதநேய இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையம் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு பயிற்சி அளிக்கிறது.
அந்த வகையில் கடந்த 17 ஆண்டுகளில் இந்த பயிற்சி மையத்தில் படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., இந்திய வனத்துறை பணி ஆகிய பதவிகளிலும், டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1, 2, 2ஏ மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், உதவி என்ஜினீயர் போன்ற பதவிகளிலும் இதுவரை 3 ஆயிரத்து 699 பேர் வெற்றி பெற்று அலங்கரித்து இருக்கின்றனர். இதுதவிர டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-4 பதவிகளுக்கு இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், 170 சாதி பிரிவுகளில் வெற்று பெற்று பணியில் இருக்கின்றனர்.
சிவில் நீதிபதி பதவிகள்
மேலும் சிவில் நீதிபதி பதவிகளுக்கு 2012-ல் 38 பேரும், 2014-ல் 57 பேரும், 2018-ல் 46 பேரும், 2019-ல் 40 பேரும் என 181 பேர் சிவில் நீதிபதிகளாகவும், மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு 2013-ல் 5 பேரும், 2019-ல் ஒருவரும், அரசு உதவி குற்றவியல் வக்கீல் பதவிகளுக்கு 2019-ல் 7 பேரும், 2021-ல் 12 பேரும், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்துடன் இணைந்து நடத்திய இலவச பயிற்சியில் படித்து வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது 245 சிவில் நீதிபதி பதவிகளுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டு இருக்கிறது. இந்த பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 19-ந்தேதியும், முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதம் 28, 29-ந்தேதியும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில், மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்துடன் இணைந்து பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
விண்ணப்பிக்கலாம்
இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வருகிற 10-ந்தேதிக்குள் எண்.28, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், சென்னை-35 என்ற முகவரியில் அமைந்துள்ள மனிதநேய கட்டணமில்லா ஐ.ஏ.எஸ். கல்வியகத்துக்கு நேரிலோ அல்லது 044-24358373, 24330952, 25342739, 8428431107 என்ற எண்கள் வாயிலாகவோ, tnbarcouncil@yahoo.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, mntfreeias.com என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி தொடக்கம் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) பார்கவுன்சில் ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெறும் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார்.