அரசு பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி
அரசு பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் அரசு பள்ளியில் படிக்கும் 350 மாணவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தி அதில் இருந்து 50 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்க முன் வந்துள்ளார். இதன் தொடக்க விழா சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள அரசன் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. விழாவுக்கு அசோகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி முன்னிலை வகித்தார். நீட் பயிற்சியாளர் தினேஷ்குமார் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு இலவச நீட் பயிற்சி வகுப்பினை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். விழாவில் அசோகன் எம்.எல்.ஏ. கூறுகையில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து அதிக அளவில் டாக்டர்கள் உருவாக வேண்டும். கிராமப்புற மாணவர்கள் இதில் அதிக ஆர்வமாக இருக்கிறீர்கள். உங்களுக்காக தான் இந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. 30 நாட்கள் மாணவர்கள் இங்கேயே தங்கி பயிற்சி பெறலாம். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிவகாசி தொழிலதிபர்கள் பலர் உதவ முன் வந்துள்ளனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் தீபிகாஸ்ரீ நன்றி கூறினார்.