தாட்கோ நிறுவனம் சார்பில் வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்களுக்கு வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.;
மயிலாடுதுறை மாவட்டத்தில் தாட்கோ நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்களுக்கு வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வங்கி தேர்வு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மூலம் துணை மேலாளர் பணிக்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் துணைமேலாளருக்கான 2000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதில் 21 வயதுமுதல் 35 வயதுவரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பட்டதாரி மாணவர்களும் வருகிற 27-ந் தேதிக்குள் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இப்பதவிக்கான தேர்வு முறையானது முதற்கட்டத் தேர்வு, முதன்மை, நேர்காணல் மற்றும் குழுப் பயிற்சிகள் என மூன்று நிலைகளில் நடைபெற உள்ளது.
இலவச பயிற்சி
முதற்கட்ட தேர்வானது 2023 நவம்பரிலும், முதன்மை தேர்வானது 2023 டிசம்பர் மற்றும் 2024 ஜனவரியிலும், நேர்காணல் மற்றும் குழு பயிற்சிகளுக்கான அழைப்பு 2024-ஜனவரி மற்றும் பிப்ரவரியிலும் நடைபெற உள்ளது. இப்பதவிக்கான ஆரம்ப கால மாத ஊதியம் ரூ.41,960 ஆகும்.
இத்தேர்வில் வெற்றி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு வெராண்டா ரேஸ் பயிற்சி நிலையத்தின் மூலம் இலவச பயிற்சியை வழங்க தாட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலமாக ஏற்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04364-211217 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.