''நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு

‘‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க 20-ந்தேதி கடைசி நாள் ஆகும்.;

Update: 2023-05-11 18:45 GMT

தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "போட்டி தேர்வு" பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டம் மற்றும் ஊரக கடன்கள் அமைச்சரால் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. "நான் முதல்வன்" போட்டி தேர்வு பிரிவானது தமிழக இளைஞர்கள் மத்திய அரசு போட்டி தேர்வுகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவான சிறந்த திறன் பயிற்சி வழங்குவதையே முதன்மையான குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களான பணியாளர் தேர்வு ஆணையம், ரெயில்வே பணியாளர் தேர்வுகள், வங்கி தேர்வுகள், இந்திய குடிமை பணி தேர்வுகள் போன்று பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர்-மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பயிற்சியினை கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் கூடுதல் அரங்கில் அளிக்கப்படவுள்ளது. 150 மாணவர்களுக்கு நேரடி வகுப்பறை பயிற்சி சிறந்த வல்லுனர்களைக் கொண்டு வழங்கப்படும். மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான செலவீனங்களை "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் அரசே ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சியினை அங்கமாக 300 மணி நேர தனி வழிகாட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் ஆகியவை 100 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இத்திட்டத்திற்கான வல்லுனர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் நியமிக்கப்படுவார்கள். இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற ஆர்வமுள்ள இளைஞர்கள் " http://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC-REGISTRATION.ASPX " என்ற பதிவுதளத்தில் பதிவு செய்யலாம். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 20-ந்தேதி ஆகும். பயிற்சி வகுப்புகள் 25-ந்தேதி தொடங்கவுள்ளது. ஏதேனும் விவரங்களுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும். மேலும் உதவி இயக்குனரை 7904465646 என்ற செல்போன் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அலுவலக மேலாளரை (பொது) 9788532233 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்