சீருடை பணியாளர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீரங்கத்தில் உடல் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது.
உடல் தகுதி தேர்வு
தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியம் சார்பில் நடந்த எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உடல் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஸ்ரீரங்கம் ஆண்கள் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டி மையம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 6 பெண்கள் உள்பட 23 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். கயிறு ஏறுதல், ஓட்டப்பயிற்சி, பந்து எறியும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் கூறுகையில், `தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இலவச உடல் தகுதி தேர்வுக்கான பயிற்சியினை பெற்றுக்கொள்ளலாம். இந்த பயிற்சி முகாமில் நகர்ப்புறங்களில் இருந்து மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் உள்ளவர்களும் கலந்து கொள்ளவேண்டும். விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 70103 70557, 94990 55901, 94990 55902 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டும் பயன்பெறலாம்' என்றார்.