சென்னையில் 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே நாளில் 8,747 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

சென்னையில் 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே நாளில் 8,747 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

Update: 2023-07-31 23:53 GMT

சென்னை,

சென்னை எழும்பூர், திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட 24 பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் 3,063 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.

எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,073 மாணவர்கள் மற்றும் 1,139 மாணவிகள் என மொத்தம் 2,212 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

இதையடுத்து திரு.வி.க.நகர் மண்டலம், எம்.எச். சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட 6 பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் 260 மாணவர்கள், 591 மாணவிகள் என மொத்தம் 851 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

கொளத்தூர்

துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 86 மாணவர்கள், 264 மாணவியர் என மொத்தம் 350 மாணவர்களுக்கும், புனித கேபிரியேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட 20 பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் 812 மாணவர்கள், 726 மாணவிகள் என மொத்தம் 1,538 மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள்கள் அமைச்சரால் வழங்கப்பட்டது.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், 638 மாணவர்கள், 556 மாணவிகள் என மொத்தம் 1,194 மாணவர்களுக்கும், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில், 579 மாணவர்கள், 799 மாணவிகள் என மொத்தம் 1,378 மாணவர்களுக்கும், அம்பத்தூரில் 280 மாணவர்கள், 944 மாணவிகள் என மொத்தம் 1,224 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

6 சட்டமன்ற தொகுதிகள்

துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட 71 பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் 3,728 மாணவர்கள், 5,019 மாணவியர் என மொத்தம் 8,747 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.22 கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஆ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்