19 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 69 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காந்தி கூறினார்.;

Update: 2022-09-13 19:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 69 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காந்தி கூறினார்.

இலவச சைக்கிள்கள்

கிருஷ்ணகிரி அரசு பெண்கள், காவேரிப்பட்டணம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 1,558 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார். அப்போது, அமைச்சர் பேசியதாவது:-

பல்வேறு திட்டங்கள்

மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19,026 மாணவ, மாணவிகளுக்கு, ரூ.9 கோடியே 69 லட்சத்து 57 ஆயிரத்து 330 மதிப்பில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக இலவச பஸ் வசதி, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டங்கள் ஆகும்.

மாணவிகள் சேர்க்கை

தற்போது மாணவ, மாணவிகளின் உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு செல்ல சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும், அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களையும் மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி, நல்ல முறையில் தேர்ச்சி பெற வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி கலெக்டர் சதீஸ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், நகராட்சி தலைவர் பரிதாநவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி, பேரூராட்சி தலைவர்கள் அம்சவேணி, தம்பிதுரை, சந்தோஷ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் நவாப், தி.மு.க. பிரமுகர் கே.வி.எஸ்.சீனிவாசன், கவுன்சிலர்கள் செந்தில்குமார், பாலாஜி, முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்