பூர்வீக சொத்து மோசடியாக விற்பனை: ஆண்டிப்பட்டி சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

பூர்வீக சொத்தை மோசடியாக விற்பனை செய்ததாக ஆண்டிப்பட்டி சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Update: 2022-06-02 17:07 GMT

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 61). இவர் மற்றும் இவருடைய சகோதரர்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தான 2 ஏக்கர் 43 சென்ட் நிலம் ஆண்டிப்பட்டி சந்தைப்பேட்டை அருகில் உள்ளது. இந்த பூர்வீக சொத்தை, சுப்பிரமணியனுக்கு தெரியாமல் அவருடைய தம்பி கண்ணன் மற்றும் சிலர் சேர்ந்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி இந்த சொத்துகளை விற்பனை செய்வதற்கு ஆண்டிப்பட்டி சார்பதிவாளர் உஷாராணி, ஆவண எழுத்தர் மகாதேவன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் சுப்பிரமணியன் புகார் கொடுத்தார். அதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த சம்பவம் குறித்து கண்ணன், உஷாராணி, மகாதேவன், மதுரையை சேர்ந்த மற்றொரு கண்ணன், எரதிமக்காள்பட்டியை சேர்ந்த தங்கவேல் ஆகிய 5 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்