கடன் தொகையை வங்கியில் செலுத்தாமல் சுயஉதவிக்குழுவினரிடம் மோசடி
கடன் தொகையை வங்கியில் செலுத்தாமல் சுயஉதவிக்குழுவினரிடம் மோசடி செய்ததாக, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், சின்னாளப்பட்டியை சேர்ந்த சுயஉதவிக்குழு பெண்கள் சிலர் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் வங்கியில் கடன் வாங்கினோம். அதை உறுப்பினர்கள் அனைவரும் முறையாக திரும்ப செலுத்திவிட்டோம். இந்த நிலையில் கடனை திரும்ப செலுத்தவில்லை என்று கூறி வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது.
இதுபற்றி விசாரித்த போது குழுவின் பெயரில் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கிவிட்டு, குழு உறுப்பினர்களிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியதாக ஏமாற்றி இருக்கின்றனர். மேலும் நாங்கள் கொடுத்த கடன் தவணை தொகையை வங்கியில் செலுத்தாமல் 2 பெண்கள் மோசடி செய்து உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.