செல்போன்கள் மூலம் நூதன மோசடி

மயக்கும் குரலில் பெண்கள் பேசி, செல்போன்கள் மூலம் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-03-14 17:08 GMT

ஹலோ... உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? வீடு-மனை வேண்டுமா? நகைக்கடன் தேவையா?... என்பது போன்ற தகவல்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும், அழைப்புகளாகவும் அன்றாடம் வருகின்றன.

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து பேசுகிறோம், 'உங்களால் முடிந்த பண உதவிகளை இந்த வங்கி கணக்கில் செலுத்துங்கள்' என்பது போன்ற அழைப்புகளும் அடிக்கடி வருகின்றன. 'சென்னைக்கு மிக அருகே குறைந்த விலையில் சகல வசதிகளுடன் வீட்டுமனை. உடனே முந்துங்கள்' போன்ற குரல் பதிவு அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.

அதுமட்டும் அல்ல வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு விவரங்களை பெற்று, செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை வாங்கி அப்பாவி மக்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன.

அதேபோன்று 'உங்கள் செல்போன் எண்ணுக்கு மெகா பரிசு விழுந்துள்ளது. இந்த லிங்கை திறந்து பாருங்கள்' என்று குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் ஒரு நொடியில் வங்கி கணக்கில் இருந்து பணம் 'அபேஸ்' செய்யப்படுகிறது.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கார்த்திகேயன் 'ஆன்லைன்' பண மோசடி கும்பல் அனுப்பிய லிங்கை தொட்டு ரூ.65 ஆயிரத்தை பறிகொடுத்தார். அவரிடம் 'ஆன்லைன்' மூலம் சோபா, மேஜை, கட்டில் வாங்குவதாக கூறி இந்த நூதன மோசடி அரங்கேறியது.

விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப 'சைபர்' குற்றங்களும் புதுப்புது வடிவங்கள் எடுத்து வருகின்றன. 'சைபர்' குற்றங்களை தடுப்பது போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுபோன்ற அழைப்புகள், மோசடி குறுந்தகவல்கள் முதலில் மனதை மயக்குவதாக இருந்தாலும் இறுதியில் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

10 நிமிடத்தில் கடன்

முருகன் (சமூக ஆர்வலர், நத்தம் மெய்யம்பட்டி):- ஆன்லைன் மோசடி கும்பல், செல்போனில் நைசாக பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு அப்பாவி மக்களை ஏமாற்றி விடுகின்றனர். என்னிடம் கூட ஒருசில முறை மோசடி கும்பல் பேசி இருக்கிறது. ஆனால் நான் வங்கி கணக்கு விவரங்களை கொடுக்காமல் இணைப்பை துண்டித்து விட்டேன். மேலும் ஆண்கள் பேசினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்று கருதி, பெண்களை பேச வைத்து மோசடி செய்கின்றனர். ஆன்லைனில் 10 நிமிடங்களில் கடன் வழங்குவதாக கூறி முன்தொகை செலுத்தும்படி பேசி மோசடி செய்கின்றனர். இதில் பணத்தை இழந்தவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே மீண்டும் கிடைத்து உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இதுபோன்ற மோசடி நபர்களை கைதுசெய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.

பாரதி (இல்லத்தரசி, வேடசந்தூர்):- விஞ்ஞான வளர்ச்சி வேலைகளை எளிதாக்கி வருகிறது. முன்பு ஒருவருக்கு பணம் அனுப்ப வங்கியில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டும்.தற்போது வீட்டில் இருந்தே செல்போன் மூலம் பணம் அனுப்பிவிடலாம். இந்த செல்போன் மூலம் மோசடிகளும் அதிகரித்து விட்டது. ஒருகட்டத்தில் வங்கி அதிகாரி எனக்கூறி வங்கி கணக்கு விவரங்களை பெற்று மோசடி செய்தனர். அது பற்றி அறிந்த பலரும் தற்போது வங்கி அதிகாரி பேசுவதாக கூறினாலும் விவரங்களை கூறுவது இல்லை. இதனால் டிஜிட்டல் திருடர்கள் ஜீ பே, போன் பே மூலம் தவறாக பணம் அனுப்பி விட்டதாக கூறி பணத்தை திரும்ப அனுப்பும்படி கூறி ஏமாற்றுகின்றனர். அதற்காக மோசடி நபர்கள் அனுப்பும் இணைய இணைப்பை (லிங்க்) கிளிக் செய்த அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்த மொத்த தொகையும் பறிபோய்விடுகிறது. விஞ்ஞான வளர்ச்சியை மோசடி நபர்கள் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.

ஆசையை தூண்டி மோசடி

வியாபாரி சங்க செயலாளர் பாபு (நெய்க்காரப்பட்டி) :- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டதாக கூறி மோசடி செய்தனர். தற்போது கார் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் பரிசாக விழுந்து இருப்பதாக கூறி செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்புகின்றனர். அந்த காரை வாங்குவதற்கு குறுந்தகவலுடன் வரும் இணையதள இணைப்பை (லிங்க்) கிளிக் செய்து பதிவேற்றும்படி கூறி பணத்தை பறிக்கின்றனர். எனக்கு குறைந்த விலையில் கார் விற்பனைக்கு இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அந்த காருக்கு முதலில் ரூ.25 ஆயிரம் செலுத்தினால் போதும், மீதி தொகையை காரை வாங்கியதும் செலுத்தலாம் என்று ஆசையை தூண்டினர். இதுபற்றி எனது நண்பரிடம் விசாரித்த போது மோசடி கும்பலின் கைவரிசை என்று கூறினார். இதனால் நான் பணம் செலுத்தவில்லை. மக்களிடம் ஆசையை தூண்டி மோசடி செய்யும் நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

----------------

பாக்ஸ்

மயக்கும் குரலில் அழைப்பு

சில அழைப்புகளில் பேசும் பெண்கள், 'எங்கள் நிறுவனத்தின் ஆயுர்வேத 'செக்ஸ்' மாத்திரையை பயன்படுத்தினால் நீண்ட நேரம் உல்லாசமாக இருக்கலாம் என்று கொஞ்சும் குரலில் பேசி ஆண்களை மயக்கி விடுகிறார்கள்.

சபலம் அடையும் ஆண்கள் அவர்கள் கேட்கும் மருந்து விலையை 'ஆன்லைன்' பரிவர்த்தனை வழியாக அனுப்பி விடுகிறார்கள். ஆனால் பார்சல் வரும். மருந்து வீரியம் இல்லாமல் ஏமாந்து போகிறார்கள். மயக்கும் குரலில் மயங்கி பணத்தை இழந்து விடுகிறார்கள்.

இதே போன்று மசாஜ் செய்ய வேண்டுமா? பெண்ணின் பெயரை போட்டு இந்த எண்ணை அழையுங்கள் என்று வரும் சில குறுந்தகவல்களை நம்பி செல்லும் ஆண்களிடம் அதிக பணம் பறிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

=====

ஆன்லைன் பரிவர்த்தனையில் உஷார்...

திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா கூறுகையில், மோசடி நபர்கள் புதிது, புதிதாக ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் தவறாக பணம் அனுப்பி விட்டதாகவும், பரிசு விழுந்து இருப்பதாகவும் கூறி இணையதள இணைப்புகளை (லிங்க்) அனுப்புகின்றனர். அதை கிளிக் செய்த அடுத்த சில நொடிகளில் சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் இருக்கும் பணம் அனைத்தும் மோசடி நபருக்கு சென்றுவிடும். அதேபோல் ஆன்லைனில் வேலை வழங்குவதாகவும் ஏமாற்றுகின்றனர். எனவே பொதுமக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். செல்போனுக்கு வரும் குறுந்தகவலுடன் இருக்கும் இணையதள இணைப்பை கிளிக் செய்யக்கூடாது. மேலும் யாராவது பணத்தை தவறாக அனுப்பி விட்டதாக பேசினால், அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள் பணத்தை நேரில் தருகிறேன் என்று கூற வேண்டும். அதற்கு மாறாக பணத்தை வங்கி கணக்கில் இருந்து அனுப்ப கூடாது. வங்கி கணக்கு விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது. முகம் தெரியாத, அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஆன்லைனில் பரிமாற்றத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், என்றார்

Tags:    

மேலும் செய்திகள்