கொரோனாவில் இறந்த கணவருக்கு பணம் வந்ததாக பெண்ணிடம் மோசடி
கொரோனாவில் இறந்த கணவருக்கு பணம் வந்ததாக பெண்ணிடம் மோசடி செய்த மாற்றுத்திறனாளியை போலீசார் தேடி வருகின்றனர்.;
கொரோனாவில் இறந்த கணவருக்கு பணம் வந்ததாக பெண்ணிடம் மோசடி செய்த மாற்றுத்திறனாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் டவுன் காமராஜர் நகர் 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி செல்வி (வயது 42). தாமோதரன் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார். இதனை அறிந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் செல்வியிடம் உன்னுடைய கணவர் கொரோனாவில் இறந்து விட்டதால், அரசு சார்பில் பணம் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் தாலுகா அலுவலகத்தில் பணம் கொடுத்தால் மட்டுமே உங்கள் கணவரின் இறப்பு பணம் கிடைக்கும் எனக் கூறி செல்வியின் காதில் இருந்த ½ பவுன் கம்மல் மற்றும் ரூ.500 ஆகியவற்றை வாங்கிக்கொண்டார். பின்னர் நான் முன்னால் இரு சக்கர வாகனத்தில் தாலுகா அலுவலகம் செல்கிறேன். நீங்கள் பின்னால் வாருங்கள் எனக் கூறிவிட்டு சென்று உள்ளார். செல்வி தாலுகா அலுவலகத்துக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்தும் அந்த நபர் வரவில்லை.
இதனால் செல்வி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மாற்றுத்திறனாளியை தேடி வருகின்றனர்.