சேலம்:-
சேலத்தில் ஆன்லைன் மூலம் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் பணம்
சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் வித்யா (வயது 36). இவருடைய செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில் அனுப்பப்பட்டுள்ள டாஸ்கில் பணம் கட்டி விளையாடி இலக்கை அடைந்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் அதில் இருந்த லிங்கை திறந்து குறுந்தகலில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.11 லட்சத்து 14 ஆயிரத்தை செலுத்தினார்.
அதன்பிறகு அவருக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை. இதையடுத்து குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அது `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வித்யா இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் வங்கி
சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்கேயன் (41). இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் வங்கி பெயரில் இருந்து குறுந்தகவல் வந்தது. அதில் உங்களுக்கு அனுப்பிய லிங்க்கை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி கார்த்திகேயன் பதிவிறக்கம் செய்த போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் எடுக்கப்பட்டு விட்டதாக குறுந்தகவல் வந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கேயன் மீண்டும் அதை பதிவிறக்கம் செய்தார். அப்போதும் அவரது வங்கி கணக்கில் மேலும் ரூ.5 லட்சம் எடுக்கப்பட்டு விட்டதாக குறுந்தகவல் வந்தது.
இந்த மோசடி குறித்து கார்த்திக்கேயன் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.