என்ஜினீயரிடம் ரூ.80 லட்சம் மோசடி-போலீஸ் கமிஷனரிடம் புகார்
என்ஜினீயர் ஒருவரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸ் கமிஷனரிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பழையபாளையம் குடிதெரு சிவநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 32), சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் நேற்று சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சேலம் அஸ்தம்பட்டியில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ஒருவர் எனக்கு அறிமுகமானார். பின்னர் அவர் தனது நிறுவனத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு பணம் இல்லை என்று கூறினேன். அப்போது வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியதை நம்பி எனது ஆவணங்களை கொடுத்தேன். அதை பயன்படுத்தி அவர் பல்வேறு வங்கிகளில் ரூ.80 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டார். எனவே ரூ.80 லட்சம் பணத்தை திரும்ப பெற்றுத்தரவும், மோசடி செய்தவர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.