ஓய்வுபெற்ற அரசு டாக்டரிடம் ரூ.8 லட்சத்து 34 ஆயிரம் மோசடி
திருவெறும்பூரில் கார் பம்பர் பரிசு விழுந்து இருப்பதாக கூறி ஓய்வுபெற்ற அரசு டாக்டரிடம் ரூ.8 லட்சத்து 34 ஆயிரத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர்கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவெறும்பூரில் கார் பம்பர் பரிசு விழுந்து இருப்பதாக கூறி ஓய்வுபெற்ற அரசு டாக்டரிடம் ரூ.8 லட்சத்து 34 ஆயிரத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர்கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வுபெற்ற அரசு டாக்டர்
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் டி-நகர் முதல்தெருவை சேர்ந்தவர் சஞ்சீவிபெருமாள் (வயது 68). ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை டாக்டரான இவர் சமீபத்தில் ஆன்லைன் மூலம் ஒரு நிறுவனத்தில் பொருள் வாங்கினார். இதையடுத்து சில தினங்களில் அந்த நிறுவனத்தில் இருந்து சஞ்சீவிபெருமாள் பெயருக்கு கூரியர் தபால் வந்தது.
அந்த தபாலை பிரித்து பார்த்தபோது, உங்களுக்கு கார் பம்பர் பரிசு விழுந்துள்ளது. அதை பெற்று செல்வதற்கு கீழ்கண்ட செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு ஒரு எண்ணும் கொடுக்கப்பட்டு இருந்தது. உடனே சஞ்சீவிபெருமாள் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர், பரிசு காரை எடுத்து செல்ல வேண்டுமானால் ஜி.எஸ்.டி., வரி உள்ளிட்டவகைளுக்காக தாங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
ரூ.8 லட்சத்து 34 ஆயிரம் மோசடி
பின்னர் அந்த நபர், ரிசர்வ் வங்கியில் இருந்து அனுப்பியது போன்ற கடிதம் ஒன்றையும் அனுப்பினார். இதை நம்பிய சஞ்சீவிபெருமாள் அவர்கள் கூறிய ஆலோசனைப்படி, 2 வங்கி கணக்குகளுக்கு ரூ.8 லட்சத்து 34 ஆயிரத்து 621 பல்வேறு தவணைகளில் செலுத்தினார். அதன்பிறகு அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு விட்டது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சஞ்சீவிபெருமாள் இது குறித்து மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் வடமாநிலத்தை சேர்ந்த ஆன்லைன் மோசடி கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். தினந்தோறும் ஆன்லைன் மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.