ஓட்டலை விலைக்கு வாங்குவதாக கூறி ரூ.73 ஆயிரம் மோசடி

சேலத்தில் ஓட்டலை விலைக்கு வாங்குவதாக கூறி ரூ.73 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரூ.20 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-30 20:00 GMT

சேலத்தில் ஓட்டலை விலைக்கு வாங்குவதாக கூறி ரூ.73 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரூ.20 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளது.

ஓட்டல் விற்பனை

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 53). இவருக்கு சொந்தமாக ஏற்காட்டில் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலை விற்பனை செய்வதாக கடந்த மாதம் முன்பு சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். அதை பார்த்த ஒருவர், ஜெகதீஷ் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அந்த ஓட்டலை விலைக்கு வாங்க விருப்பம் உள்ளதாகவும், அதற்காக பாதி தொகையை முன்பணமாக கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்பணம் தருவதற்கு அந்த நபர், ஜெகதீசை தொடர்பு கொண்டு பதிவுத்தொகையாக ரூ.73 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய ஜெகதீஷ், அந்த நபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.73 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அதன்பிறகு அந்த நபர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த ஜெகதீஷ், இது தொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

ரூ.20 ஆயிரம் மீட்பு

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கியின் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மோசடியாக பெற்ற தொகையில் ரூ.20 ஆயிரம் மீட்கப்பட்டது.

அந்த தொகையை ஜெகதீசின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மேலும், மீதியுள்ள ரூ.53 ஆயிரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மோசடியில் ஈடுபட்ட நபரை பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

யாரும் ஏமாற வேண்டாம்

இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் கூறுகையில், அடையாளம் தெரியாத நபர்கள் கூறும் தகவல்களை நம்பி பணம் செலுத்த வேண்டாம். சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் நபர்களை நம்பியோ அல்லது குறைந்து விலையில் பொருட்களை விற்பனை மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறும் நபர்களை நம்பியோ யாரும் ஏமாற வேண்டாம்.

மேலும், வங்கி கணக்கு முடக்கப்பட உள்ளதாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி அதில் வரும் இணைப்புகளில் சென்று எவ்வித விவரங்களையும் பதிவு செய்ய வேண்டாம். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பேசும் நபர்களிடம் தங்களுடைய கிரெடிட் கார்டு, வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்துவிட்டால் உடனே சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு இழந்த பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்