சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.7¾ லட்சம் மோசடி

சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரியிடம் ரூ.7¾ லட்சம் மோசடி செய்த புகாரில் நாமக்கல் அ.தி.மு.க. பெண் நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-29 23:11 GMT

அ.தி.மு.க. பிரமுகர்

சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்குகாட்டை சேர்ந்தவர் ஸ்ரீவிஜய் (வயது 44). பட்டதாரியான இவருக்கு ஒரு நண்பர் மூலம் ராசிபுரத்தை சேர்ந்த ராஜ்மகேந்திரன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது, ராஜ்மகேந்திரன், தனது தாய் கலைவாணி நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி இணை செயலாளராக இருப்பதாகவும், தந்தை சுப்பிரமணி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதை உண்மை என்று ஸ்ரீவிஜய் நம்பினார்.

மேலும், தனது பெற்றோர் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும், தற்போது சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலர் வேலை வாங்கி தருவதாக ஸ்ரீவிஜயிடம், ராஜ்மகேந்திரன் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்காக ரூ.10 லட்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீவிஜய் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 3 தவணையாக ரூ.7 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் ராஜ்மகேந்திரனின் குடும்பத்தினர் அரசு வேலை எதுவும் வாங்கி தரவில்லை.

4 பேர் மீது வழக்கு

இதனால் கொடுத்த பணத்தை ஸ்ரீவிஜய் திருப்பி கேட்டபோது அவர்கள் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவிடம் ஸ்ரீவிஜய் புகார் செய்தார். அதன்பேரில் மோசடி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு இளமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அ.தி.மு.க. பெண் நிர்வாகி கலைவாணி, அவரது கணவர் சுப்பிரமணி, மகன்கள் ராஜ்மகேந்திரன், விஜய் ஆனந்த் ஆகியோர் மீது கூட்டுசதி, மோசடி உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்