ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரிடம் ரூ.55 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரிடம் ரூ.55 லட்சம் மோசடி செய்த கடலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்

Update: 2023-07-30 18:45 GMT

கடலூர்

ஓய்வுபெற்ற என்.எல்.சி. ஊழியர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே விழப்பள்ளத்தை சேர்ந்தவர் மணியன் மகன் அன்பழகன்(வயது 65). ஓய்வுபெற்ற என்.எல்.சி. ஊழியர். இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த மனுவில், அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு தெரிந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ரஜினி என்பவர் மூலம் நெய்வேலியை சேர்ந்த புரட்சிகதிருடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர், தனக்கு தெரிந்த புவனகிரி அருகே சேந்திரக்கிள்ளையை சேர்ந்த ராமன் மகன் தீனதயாளன்(43) என்பவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி காசநோய் பிரிவில் ஊழியராக பணியாற்றி வருவதாகவும், அவருக்கு பல அரசு அதிகாரிகளை தெரியும் எனவும் கூறினார். மேலும் அவர் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

போலி பணி ஆணை

இதை நம்பிய நான் என்ஜினீயரிங் முடித்துள்ள எனது மகன் வினோத்துக்கு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளர் வேலைக்காக ரூ.25 லட்சமும், எம்.ஏ., பி.எட் முடித்துள்ள மகள் வித்யாவுக்கு ஆசிரியர் வேலைக்காக ரூ.15 லட்சமும், அதேபோல் மருமகள் அனிதாவுக்கு ஆசிரியர் வேலைக்காக ரூ.15 லட்சமும் தீனதயாளன், அவரது மனைவி உஷா ஆகியோரிடம் கொடுத்தேன்.

பணத்தை பெற்ற அவர்கள் 2 பேரும் பணி ஆணை உத்தரவை வழங்கினர். இதை பெற்ற எனது மகன் உள்ளிட்ட 3 பேரும் சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலகம், பள்ளிக்கு சென்று கொடுத்தபோது தான் அது போலி ஆணை என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து தீனதயாளன் தம்பதியரிடம் பணத்தை திருப்பி கேட்டதற்கு அவர்கள் எங்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். ஆகவே ரூ.55 லட்சம் மோசடி செய்து, போலி பணி ஆணை வழங்கிய அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

2 பேர் கைது

இந்த புகார் மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இது பற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார், தீனதயாளன், உஷா ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் வினோத், வித்யா, அனிதா ஆகிய 3 பேரிடமும் ரூ.55 லட்சத்தை பெற்று மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து தீனதயாளன், உஷா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் வடலூரில் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனம் நடத்தி, அங்கு படிக்க வரும் நபர்களிடம் அரசு வேலைவாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறி பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

இவர்கள் 2 பேரும் ஏற்கனவே ரெயில்வே, இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி 6 பேரிடம் ரூ.39 லட்சம் மோசடி செய்த வழக்கும் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்