நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி

கும்பகோணத்தில், நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-12 20:24 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில், நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

நிதி நிறுவனம்

திருச்சி உறையூர் புதூர் பாய்க்கார தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா(வயது 40). இவர், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உப்புக்காரத் தெரு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிதிநிறுவனத்தில் மன்னார்குடி பகுதியை சேர்ந்த நரேந்திரன்(35) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.4 ஆயிரம் வட்டி தருவதாக அறிவித்திருந்தனர். இதை நம்பிய 200-க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தனர். மேலும் மாதாந்திர சிறு சேமிப்பு தொகையும் செலுத்தியிருந்தனர்.

பணத்தை திருப்பிதரவில்லை

சிறுசேமிப்பு சீட்டு காலக்கெடுவும், முதலீடுக்கான காலக்கெடுவும் முடிந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை நிதி நிறுவனத்தினர் திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிதி நிறுவனம் மூடப்பட்டது. வாடிக்கையாளர்கள் நிதிநிறுவன உரிமையாளரான ராஜேஷ் கண்ணாவை பலமுறை நேரில் சந்தித்து தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டுள்ளனர்.

போலீசில் புகார்

அப்போது பலருக்கு ராஜேஷ்கண்ணா காசோலை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த காசோலைகள் அனைத்தும் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியதால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் 60 பேர் கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் திருச்சியில் இருந்த நிதி நிறுவன உரிமையாளர் ராஜேஷ்கண்ணாவையும், மன்னார்குடியில் இருந்த நிதி நிறுவன மேலாளர் நரேந்திரனையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிதி நிறுவனம் மூலம் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்