ஏலச்சீட்டு நடத்தி வக்கீலிடம் ரூ.5 லட்சம் மோசடி:தந்தை, மகனுக்கு 3 ஆண்டு சிறை

ஏலச்சீட்டு நடத்தி வக்கீலிடம் ரூ.5 லட்சம் மோசடி:செய்த தந்தை, மகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2023-06-23 22:10 GMT

ஏலச்சீட்டு நடத்தி வக்கீலிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த தந்தை, மகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பவானி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை வக்கீல்

அந்தியூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன்கள் சின்னச்சாமி, கார்த்திகேயன். இதில் பத்திர எழுத்தர்களான அறுமுகமும், கார்த்திகேயனும் ஏலச்சீட்டும் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீலாக பணிபுரியும் தாம்பரத்தை சேர்ந்த குமரகுரு (வயது 54) என்பவருக்கும் ஆறுமுகம் குடும்பத்தாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சின்னச்சாமியும், கார்த்திகேயனும் குமரகுருவிடம் எங்களின் தந்தை பல வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அதில் நீங்கள் சேர்ந்து பணம் கட்டினால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினர். இதையடுத்து 3 மாதத்துக்கு ஒரு முறை ரூ.50 ஆயிரம் என்று ரூ.5 லட்சம் குமரகுரு செலுத்தியதாக தெரிகிறது.

வழக்கு தொடர்ந்தார்

இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஏலச்சீட்டு முதிர்வடைந்துவிட்டது. இதனால் தனக்கு வரவேண்டிய பணத்தை தருமாறு குமரகுரு கேட்டுள்ளார். ஆனால் அறுமுகம், சின்னச்சாமி, கார்த்திகேயன் 3 பேரும் குமரகுருக்கு பணத்தை தராமல் இழுத்தடித்துள்ளனர். இதற்கிடையே சின்னச்சாமி இறந்துவிட்டார். இந்தநிலையில் ஏலச்சீட்டு நடத்தி தன்னிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்துவிட்டதாக ஆறுமுகம், கார்த்திகேயன் இருவர் மீதும் குமரகுரு அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தி பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

3 ஆண்டு சிறை

வழக்கு நடைபெற்று கொண்டு இருக்கும்போதே ஆறுமுகமும், கார்த்திகேயனும் சென்ைன ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று இருந்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஏலச்சீட்டு நடத்தி குமரகுருவிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக ஆறுமுகம், கார்த்திகேயனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரமும் விதித்து பவானி கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.

மேலும் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்துக்குள் செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்