விற்பனைக்கு ஒப்புதல் பெற்று தருவதாக கூறி ரூ.5 ½ லட்சம் மோசடி
2.57 ஏக்கர் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்திட ஒப்புதல் பெற்றுத்தருவதாக கூறி ரூ.5½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி, மே.29-
2.57 ஏக்கர் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்திட ஒப்புதல் பெற்றுத்தருவதாக கூறி ரூ.5½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைகளாக பிரித்து ஒப்புதல்
தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் பாலபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 62). இவர், தனக்கு சொந்தமான 2.57 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதையறிந்த காட்டுப்புத்தூரை சேர்ந்த மணிகண்டன், ஆறுமுகம் மற்றும் குணசேகரன் ஆகிய 3 பேரும் கோவிந்தசாமியை அணுகினர்.
அப்போது, 3 பேரும் கோவிந்தசாமிக்கு சொந்தமான 2.57 ஏக்கர் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு, ஒப்புதல் பெற்றுத்தருவதாகவும், அதற்கு ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர். அதை உண்மை என நம்பிய கோவிந்தசாமி ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்தை 3 பேரிடமும் கொடுத்துள்ளார்.
3 பேர் மீது வழக்கு
நீண்ட நாட்களாகியும் அந்த நிலத்தை மனைகளாக பிரித்து ஒப்புதல் பெறுவதற்கான எந்த முயற்சியிலும் மூவரும் ஈடுபடவில்லை என்பதை தெரிந்து, ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால், மூவரும் கோவிந்தசாமியை மிரட்டும் வகையில் பேசி துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோவிந்தசாமி, இது தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், மோசடியில் ஈடுபட்ட மணிகண்டன், ஆறுமுகம், குணசேகரன் ஆகிய 3 பேர் மீதும் கூட்டாக சேர்ந்து நம்பிக்கை மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.