அரசு வேலை வாங்கி தருவதாக பெண் உள்பட 2 பேரிடம் ரூ.4 லட்சம் மோசடி நூலகர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக பெண் உள்பட 2 பேரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த நூலகரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-17 19:15 GMT

நாகர்கோவில்:

அரசு வேலை வாங்கி தருவதாக பெண் உள்பட 2 பேரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த நூலகரை போலீசார் கைது செய்தனர்.

நூலகர்

கன்னியாகுமரி லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வ வடிவு. இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஈத்தாமொழி ஆடரவிளையை சேர்ந்தவர் சபாபதி (வயது 55). இவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நூலகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார். நான் ஒருமுறை உறவினரை பார்க்க ஆஸ்பத்திரிக்கு சென்ற போது எனக்கு சபாபதியின் பழக்கம் கிடைத்தது.

இந்த நிலையில் அவர் என்னிடம் எனது மகளுக்கு கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதற்காக என்னிடம் ரூ.2 லட்சம் வாங்கினார்.

பணத்தை பெற்று கொண்ட அவர் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. என்னிடம் பணமோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு புகார்

இதேபோல கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவரும் சபாபதி மீது மோசடி புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், 'எனது மகனுக்கு நூலகத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி என்னிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த 2 மோசடி புகார்கள் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து சபாபதியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வடசேரி பஸ் நிலையத்தில் வைத்து சபாபதியை மாவட்ட குற்றப்பிாிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்