தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 லட்சம் மோசடி
பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 லட்சம் மோசடி செய்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
4 பேரிடம் மோசடி
பெரம்பலூர் மாவட்டம், பேரளி தெற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூா்த்தி (வயது 53) கடந்த செப்டம்பர் மாதம் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்த கீழக்கரை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சீவிக்குமார் (42), அவரது மனைவி மீனாகுமாரி, தாய் சுப்பம்மாள், சிறுகுடலை சோ்ந்த ராஜேஷ், நாகராஜ், பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோட்டை சேர்ந்த பாலசுப்ரமணியன் ஆகியோர் என்னிடம் எங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறினர். பின்னர் நான் உள்பட 4 பேர் சேர்ந்து தலா ரூ.1 லட்சம் அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோம்.
6 பேர் மீது வழக்கு
ஆனால் அதன்பிறகு அவர்கள் எங்களிடம் தொடர்பில் இல்லை. நாங்கள் கொடுத்த பணத்தையும் அவர்கள் திருப்பி தராமல் மோசடி செய்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் அவர்கள் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று சஞ்சீவிக்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். சஞ்சீவிக்குமார் கீழக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.