வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி
நீலகிரி மாவட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி 23 பேரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி 23 பேரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
வேலை வாங்கி தருவதாக...
கொரோனா பாதிப்புக்கு பின்னர் வேலை இழப்பு அதிகமானது. இதனால் பலரும் வேலையிழந்து புதிய வேலைக்காக காத்திருந்தனர். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இதில் இளைஞர்களை குறி வைத்து சமூக வலைத்தளங்கள் மூலம் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
இதை நம்பி குறுஞ்செய்தியில் இருக்கும் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு பேசினால், வேலை வாங்கி தருவதாக கூறி குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலுத்துமாறு தெரிவிக்கின்றனர். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை செலுத்தியும், வேலை வாங்கி கொடுக்காமல் பின்னர் ஏமாற்றி விடுகின்றனர்.
ரூ.4 லட்சம் மோசடி
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 23 பேரிடம் ரூ.4 லட்சம் வரை பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதாவது:-
வேலை வாங்கி தருவது, கே.ஒய்.சி. அப்டேட் உள்பட பல்வேறு காரணங்களை கூறி சமீப காலமாக இளைஞர்களை ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. தற்போது வடமாநிலங்களை சேர்ந்த மோசடி ஆசாமிகள், அங்கு வறுமையில் இருப்பவர்களின் ஆவணங்களை வாங்கி, அவர்களது பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, அதற்கு தங்களது மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண்ணை கொடுத்து விடுகின்றனர்.
23 பேர் புகார்
இதன் பின்னர் அந்த வங்கி கணக்கை பயன்படுத்தி வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணத்தை ஏமாற்றி வாங்கி விடுகின்றனர். பின்னர் தங்களது சொந்த கணக்கிற்கு பணத்தை மாற்றுகின்றனர். ஒருவேளை போலீசார் வங்கியை தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய முயன்றால் அப்பாவிகள் தான் சிக்குகின்றனர். எனவே, வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்டால் ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது வரை 23 பேர் புகார் அளித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.