தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி

சங்கரன்கோவிலில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது.;

Update:2022-07-20 21:26 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கோமதியாபுரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ராஜபாளையத்தை சேர்ந்த ஞான பிரகாசம் மகன் சச்சில் எட்வின் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 24 கிராம் எடையுள்ள 2 வளையல்களையும், 48 கிராம் எடையுள்ள 4 வளையல்களையும் அடகு வைத்து 2 லட்சத்து 81 ஆயிரத்து 300 ரூபாய் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அடகு வைத்த நபர் முறையாக வட்டி கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்தில் உள்ளவர்கள் அவருடைய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, தொடர்பு கொள்ள முடியாத தவறான நம்பரை அளித்துள்ளதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து அவர் அடகு வைத்த நகைகளை சோதித்து பார்த்தபோது அது தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நிதி நிறுவன மேலாளர் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர். மேலும் இவர் மீது நெல்லை டவுன், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்