போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.28½ லட்சம் மோசடி

புதுக்கோட்டை அருகே வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.28½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-02-23 18:24 GMT

இந்தியன் வங்கி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை புதுநகரில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக தஞ்சை மாவட்டம், திருவையாறு செந்தலை மீனாட்சிபுரத்தை சேர்ந்த சரவணன் (வயது 35) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த 20.8.2018 முதல் 20.12.2022 வரை இந்த கிளையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தநிலையில் தனக்கு வேறு கிளைக்கு இட மாற்றம் வேண்டும் என்று கேட்டு மாறுதல் பெற்று வேறு கிளைக்கு சென்றுள்ளார்.

மோசடி

இந்நிலையில், அந்த வங்கிக்கு புதிய மேலாளராக கார்த்திக்பிரபு (40) என்பவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து புதிய மேலாளருக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

அதை தொடர்ந்து புதிய மேலாளர் கார்த்திக் பிரபு நகை அடமான கடன், விவசாய கடன் போன்ற விவரங்களை தணிக்கை செய்த போது பல்வேறு வாடிக்கையாளர்கள் பெயரில் போலியாக ஆவணங்களை தயார் செய்து வங்கியில் ரூ.28 லட்சத்து 51 ஆயிரத்து 639 மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலாளர் கைது

இதுதொடர்பாக கடந்த ஜனவரி 12-ந்தேதி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் விசாரணை நடத்தினார். விசாரணையில் வங்கியில் மோசடி நடந்திருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து வங்கி கிளை மேலாளராக பணியாற்றிய சரவணன் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் சரவணனை புதுக்கோட்டையில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்