பகுதிநேர வேலை வழங்குவதாக ரூ.22 லட்சம் மோசடி

பகுதிநேர வேலை வழங்குவதாகக்கூறி ரூ.22 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-11 19:28 GMT

அரிசி வியாபாரி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி டவுன், நீலிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சவுதுல்ஹசன் (வயது 32). அரிசி வியாபாரி. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் வாணியம்பாடியில் அரிசி வியாபாரம் செய்து வருகிறேன். என்னுடைய செல்போன் டெலிகிராம் செயலியில் கடந்த மாதம் 20-ந் தேதி பகுதி நேர வேலை வேண்டுமா?, இணைந்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் ஒன்று வந்தது.

அந்த விளம்பரத்தில் ஒரு லிங்க் வழங்கப்பட்டிருந்தது. அதில் சென்று பார்த்தபோது நாடு முழுவதும் உள்ள பிரபல ஓட்டல்களில் அறைகள் பதிவு செய்து கொடுக்கும் பகுதி நேர வேலை உள்ளது. அதில் இணைந்து பணியாற்றினால் கமிஷன் தொகையாக பல ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ரூ.22 லட்சம்

இதையடுத்து, அந்த லிங்க்கில் தெரிவித்த படி நான் எனது பெயர், முகவரி, தொழில், வங்கி சேமிப்பு கணக்கு எண், இ-மெயில் ஐ.டி, ஆதார் மற்றும் பான் கார்டு எண் ஆகியவற்றை பதிவு செய்தேன். அதைத்தொடர்ந்து முதல் கமிஷன் தொகையாக ரூ.1,100 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பிறகு, டெலிகிராம் வழியாக என்னை தொடர்பு கொண்ட நபர்கள் அடுத்தடுத்து லிங்க் மூலம் ஒரு சில பதிவுகளை செய்ய சொன்னார்கள். நானும் கமிஷன் தொகை உடனடியாக வந்துவிட்டதே என ஆசைப்பட்டு அவர்கள் கூறிய வழிமுறைகளை செய்தேன்.

அன்றிரவு மீண்டும் என் வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. கடந்த மாதம் 23-ந் தேதி மீண்டும் ஒரு சில ஓட்டல் பதிவுகளை செய்யக்கூறினர். நானும் அவர்கள் கூறியபடி செய்தேன். உடனே, எனது வங்கி கணக்கில் 51,878 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 நாட்களில் 68 ஆயிரம் ரூபாய் கமிஷன் தொகையாக எனக்கு கிடைத்ததால் தொடர்ந்து பகுதி நேர வேலையை செய்ய எனக்கு ஆர்வம் அதிகரித்தது.

இதை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் டெலிகிராம் செயலி வழியாக என்னை தொடர்பு கொண்டு அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு வங்கி கணக்கு எண்களை அனுப்பி அதில் பதிவுக்கட்டணம், பணியில் முதலீடு எனக்கூறி 2 நாட்களில் என்னிடம் இருந்து ரூ.22 லட்சம் பணத்தை பெற்றனர்.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

இந்த பணத்துக்கான கமிஷன் தொகையை நான் கேட்டபோது, அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கு எண்களை அவர்கள் நீக்கிவிட்டனர். இதனால், சந்தேகமடைந்த நான் அவர்களின் டெலிகிராம் குழுவை ஆய்வு செய்த போது அந்த குழுவின் உரிமையாளர்கள் கிருஷ்ணா, விஷ்ணுபிரசாத், திரிஷா அகர்வால் என்பது தெரியவந்தது.

அவர்களது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள நான் பல முறை முயன்றும் முடியவில்லை. மாறாக டெலிகிராம் குறுஞ்செய்தி மூலம் என்னை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் நான் வழங்கிய ரூ.22 லட்சத்துக்கு கமிஷன் தொகையாக 49 லட்சத்து 74 ஆயிரத்து 275 ரூபாய் பணம் வழங்க இருப்பதாகவும், இந்த தொகையை பெற வேண்டுமென்றால் மேலும் ரூ.12 லட்சம் வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே 22 லட்சம் ரூபாயை இழந்த நான் மேலும் பணத்தை இழக்க விரும்பவில்லை. என்னை போல பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை உடனடியாக கண்டறிந்து அவர்களை கைது செய்யவேண்டும். நான் இழந்த பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், இது தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்