இளம்பெண்ணிடம் ரூ.20½ லட்சம் மோசடி; தூத்துக்குடியை சேர்ந்தவர் கைது

இந்திய கடலோர காவல்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.20½ லட்சம் மோசடி செய்ததாக தூத்துக்குடியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-02 21:39 GMT

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் ஏ.ஜே.ஆர். நகரை சேர்ந்தவர் சாரதா (வயது 30). இவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில், 'தூத்துக்குடி மாவட்டம் பூபால்ராயபுரத்தை சேர்ந்த ராஜேஷ் ரெகுராம் (42) என்பவர் எனக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார். அதற்காக அவர் என்னிடம் இருந்து ரூ.20½ லட்சத்தை பெற்றுக் கொண்டார். மேலும் அவர் கடலோர காவல் படையின் வேலைக்கு உரிய ஆணையை போல போலியான நியமன ஆணையை வழங்கி, நம்பிக்கை மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு உத்தரவின் பெயரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், ரெகுராம் சென்னையில் இருப்பதை அறிந்து அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு சொகுசு கார் மற்றும் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை நடத்தி ரெகுராமை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் இனிப்பு வழங்கி பாராட்டினார்.


Tags:    

மேலும் செய்திகள்