ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.13 லட்சத்து 91 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுதிநேர வேலைவாய்ப்பு
சேலம் மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்தவர் கோதைநாயகி (வயது 27). இவர் ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலைவாய்ப்பு குறித்து தேடினார். அப்போது ஒரு குறிப்பிட்ட முகவரியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் வாட்ஸ் அப் எண்ணுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பு குறித்த லிங்க் வந்தது.
இந்த லிங்கை கோதைநாயகி கிளிக் செய்தார். மேலும் அவர் அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய போது, குறிப்பிட்ட வேலையை செய்து கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறிய மர்ம நபர் இதற்காக பணம் செலுத்த வேண்டும் என்றார்.
போலீசார் விசாரணை
இதை உண்மை என நம்பிய அவர் மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணையாக ரூ.13 லட்சத்து 91 ஆயிரம் செலுத்தினார். அதன்பிறகு வேலைவாய்ப்பு குறித்த தகவல் அவருக்கு அனுப்பவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோதைநாயகி மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரின் இந்த மோசடி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.