என்ஜினீயரிடம் ரூ.13 லட்சம் மோசடி

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-04 20:00 GMT

கோவை

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

என்ஜினீயர்

கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் டோமினிக் சேவியர் (வயது 22). என்ஜினீயரான இவர் வேலைத்தேடி வந்ததாக தெரிகிறது. அப்போது ஆன்லைனிலும் வேலை இருக்கிறதா என்று பார்த்து வந்தார். அப்போது ஆன்லைனில் ஒரு முகவரி வந்தது.

அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. உடனே அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு டோமினிக் சேவியர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். மறுமுனையில் பேசிய நபர் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி உள்ளார்.

ரூ.13 லட்சம் மோசடி

அதன்படி அவர் முதலில் குறைந்த அளவில் பணத்தை முதலீடு செய்தார். அதற்கு உடனடியாக லாபத்தொகையை அனுப்பினார்கள். இதனால் அந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை அடைந்த டோமினிக் சேவியர் கடந்த மாதம் 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ரூ.13 லட்சத்தை முதலீடு செய்தார்.

ஆனால் அதற்கு அந்த ஆன்லைன் நிறுவனம் லாபத்தையோ அல்லது, அவர் செலுத்திய பணத்தையோ திரும்ப கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டோமினிக் சேவியர் இந்த மோசடி குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏமாற வேண்டாம்

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, பெரும்பாலும் ஆன்லைனில் முதலீடு செய்யும்போது குறைந்த அளவில் பணத்தை முதலீடு செய்தால் உடனடியாக லாப தொகையை திரும்ப செலுத்திவிடுவார்கள். ஆனால் அதிக தொகையை முதலீடு செய்தால் கண்டிப்பாக லாப தொகையை கொடுக்க மாட்டார்கள். பெரும்பாலும் படித்த பட்டதாரிகள்தான் இதில் பணம் செலுத்தி ஏமாந்து வருகிறார்கள். எனவே இதுபோன்று யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்