சென்னை தனியார் நிறுவனத்திடம் வாட்ஸ்-அப் மூலம் போலியான தகவல் அனுப்பி ரூ.1.16 கோடி மோசடி

சென்னை தனியார் நிறுவனத்திடம் வாட்ஸ்-அப் மூலம் போலியான தகவல் அனுப்பி ரூ.1.16 கோடி நூதன மோசடியில் ஈடுபட்ட பீகார் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-28 21:46 GMT

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்படும் பிரபல தனியார் நிறுவனத்தின் மேலாளர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த பரபரப்பு புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் புகைப்படத்துடன், அவரது வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து வந்தது போல, ஒரு தகவல் எங்கள் நிறுவனத்திற்கு வந்தது. அதில் எங்கள் நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.16 கோடியை உடனடியாக அனுப்பி வைக்குமாறு, ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கு நம்பரும் அனுப்பப்பட்டது. முதலாளியின் புகைப்படம் அடங்கிய வாட்ஸ்அப்பில் இருந்து வந்ததால், அதை உண்மை என்று நம்பி, ரூ.1.16 கோடி உடனடியாக குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தோம்.

ஆனால் உண்மையில் எங்கள் நிறுவன உரிமையாளர் அதுபோன்ற தகவலை அனுப்பவில்லை என்று பின்னர் தெரியவந்தது. ஒரு மோசடி கும்பல் எங்கள் நிறுவன உரிமையாளர் படத்துடன் கூடிய வாட்ஸ் அப்பில் இருந்து, பணம் அனுப்பச்சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

பீகார் ஆசாமிகள் கைது

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பீகார் மாநில கும்பல், இதுபோன்ற நூதன மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சயீப்கான் (வயது 22), ராஜ்ராய்சிங் (28) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது போல் நூதன மோசடி முதல் முறையாக அரங்கேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல் வந்தால், அது உண்மையான தகவல்தானா என்பதை அறிந்து தெரிந்து, பின்னர் பணத்தை அனுப்ப வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்