திண்டிவனம் அருகே வேலை தருவதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி

திண்டிவனம் அருகே வேலை தருவதாக கூறி வாலிபரிடம் பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-06-08 16:34 GMT

விழுப்புரம், 

திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 23). இவரை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், தான் தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் வகையில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்துடன் வேலை தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சதீஷ்குமார், அந்த நபர் கூறியபடி அவர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.4,700-ஐ தனது செல்போனில் கூகுள்பே மூலம் அனுப்பினார். அதன்பிறகு சதீஷ்குமார் பணியில் சேர்ந்து 3 நாட்கள் பயிற்சி பெற்று ஒரு மாத காலம் வேலை செய்தும் அதற்குரிய சம்பளம் தராத காரணத்தினால் வேலையிலிருந்து நின்றுவிட்டார். இதுகுறித்து அவர் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதில் தனக்கு வேலை தருவதாக கூறி ரூ.4,700 பெற்று ஏமாற்றிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்