அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடிபுதுச்சேரி அரசு ஊழியர் மீது புகார்

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக புதுச்சேரி அரசு ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-01 18:45 GMT


புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உத்திரவாகிணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 34). இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் புதுச்சேரி அருகே சேராப்பட்டை சேர்ந்த ஒருவரும், கண்டமங்கலம் அருகே சின்னபாபுசமுத்திரத்தை சேர்ந்த ஒருவரும் எனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, என்னிடம் முன்பணமாக ரூ.60 ஆயிரம் பெற்று என்னை ஏமாற்றினார்கள். இதுபற்றி வில்லியனூர் போலீசில் நான் புகார் செய்தேன். அப்போது இருவருக்கும் ஆதரவாக வந்த புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அரசு ஊழியரான கண்டமங்கலத்தை சேர்ந்த சேகர் என்பவர், அந்த பணத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு அவர் தருவதாக கூறினார். சில நாட்கள் கழித்து என்னை சந்தித்து பேசிய சேகர், தனக்கு விழுப்புரம் சமூகநலத்துறை உள்ளிட்ட பிற அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் பலரை நன்கு தெரியும் என்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மூலம் , உங்கள் மனைவிக்கு அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர் பணி அல்லது கிராம உதவியாளர் பணி வாங்கித்தருவதாக கூறினார். இதை நம்பிய நான், சேகரிடம் ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்து 200-ஐ கொடுத்தேன். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. என்னை போன்று பலரிடம் அவர் மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்