வீட்டுமனை தருவதாக கூறி19 பேரிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்தவர் கைது

வீட்டுமனை தருவதாக கூறி 19 பேரிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-04 18:45 GMT


விழுப்புரம் முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உபையத்துல்லா மகன் ஷாகுல்அமீது (வயது 37). இவரிடம் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோர் சேர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு விழுப்புரம் அருகே கஸ்பாகாரணை கிராமத்தில் பிஸ்மி நகர் என்ற பெயரில் மனைப்பிரிவுகள் அமைத்து அதில் மாதம் ரூ.1,600 வீதம் 60 மாதங்கள் பணம் கட்டினால் அதற்குரிய மனைப்பிரிவுகள் பதிவு செய்து தரப்படும் என்றனர். அதேபோல் கடந்த 2016-ல் விழுப்புரம் பொய்யப்பாக்கம் பகுதியில் ரோஜா நகர் என்னும் மனைப்பிரிவுஅமைத்தும், அதில் மாதம் ரூ.1,200 வீதம் 55 மாதங்கள் பணம் கட்டினால் அதற்குரிய மனைப்பிரிவுகள் பதிவு செய்து தரப்படும் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய ஷாகுல்அமீது, ரூ.1,200 வீதம் 15 மாதங்கள் நத்தர்பாஷா, சாதிக்பாஷா ஆகியோரிடமும், அவர்கள் இல்லாத நேரத்தில் அசாருதீன், ஷாஜி ஆகியோரிடமும் மாதாந்திர தவணை தொகையை மொத்தம் ரூ.18 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

ரூ.16½ லட்சம் மோசடி

இவரைப்போன்று கடந்த 2016-ம் ஆண்டு முதல் 18 பேரிடமிருந்து ரூ.16 லட்சத்து 27 ஆயிரத்து 600-ஐ வசூல் செய்து அதற்குரிய மனைப்பிரிவுகளையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக்கொடுக்காமல் 4 பேரும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஷாகுல்அமீது உள்ளிட்டோர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நத்தர்பாஷா, சாதிக்பாஷா உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஒருவர் கைது

இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய சாதிக்பாஷாவை (53) நேற்று முன்தினம் இரவு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்