தங்கப்புதையல் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி
தங்கப்புதையல் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி
கோவை
தங்கப்புதையல் இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கைதான அண்ணன், தங்கை குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தங்கப்புதையல்
கோவை குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). இவர் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கர்நாடக மாநிலம் ஓசூருவை சேர்ந்த அண்ணன், தங்கையான பீம் (42) குடியா (35) ஆகியோர் குளிர்பானம் அருந்த அடிக்கடி வந்து சென்றனர். அவர்கள் சுதாகரிடம் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ரூ.25 ஆயிரம் பறிக்க முயன்றனர்.
சுதாகரின் புகாரின்படி கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன், சப்-இன்ஸ்பெக்டர் பாமா மற்றும் சிறப்பு தனிப்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் குடியா, பீம் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர்கள் பல்வேறு திடிக்கிடும் தகவல்களை தெரிவித்து உள்ளனர். போலீசாரிடம் அவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
அண்ணன், தங்கையான நாங்கள் இருவரும் தமிழகத்தில் அனைத்து இடங்களுக்கும் துணி வியாபாரிகளாக செல்வோம். அங்கு இருக்கும் சிறிய கடைகளுக்கு தினமும் சென்று கடையின் உரிமையாளர்களிடம் நட்பாக பழகுவோம். அப்போது அவர்களிடம், நாங்கள் கர்நாடகாவில் வீடு கட்ட குழி தோண்டும் போது புதையல் கிடைத்ததாகவும், அது தங்கம் போன்று இருந்தது என்றும், அது தங்கமா என பரிசோதித்து கூறுங்கள், வெளியே செல்வதற்கு பயமாக உள்ளது என்போம்.
லட்சக்கணக்கில் மோசடி
பின்னர் அவர்களிடம் ஒரு கிராமுக்கும் குறைவான தங்கத்தை கொடுப்போம். அதை பரிசோதித்து அவர்கள் உண்மையான தங்கம் தான் என்பார்கள். அவர்களிடம் நாங்கள் குறைந்த விலைக்கு அந்த தங்கத்தை கொடுக்கிறோம். அதை வாங்கி கொள்ளுங்கள் என கூறி 2 கிலோ வரை நாங்கள் தயாரித்து வைத்துள்ள போலி தங்கத்தை கொடுத்து விடுவோம். அதற்காக அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை பெற்று கொண்டு தலைமறைவாகி விடுவோம்.
இதுபோன்று தமிழகம் முழுவதும் சென்று ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளோம். அந்த பணத்துடன் சொந்த ஊருக்கு சென்று ஆடம்பரமாக செலவு செய்வோம். பின்னர் பணத்தை செலவழித்துவிட்டு மீண்டும் தமிழகத்துக்கு வந்துவிடுவோம். கடந்த 2 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தோம். பல இடங்களில் இருந்து தப்பித்து விட்டோம். ஆனால் கோவையில் வசமாக சிக்கிக்கொண்டோம் என்று வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை கடந்த 28-ந் தேதி போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
--