கவரிங் நாணயங்களை கொடுத்து பெண்ணிடம் 1 பவுன் நகை மோசடி

கவரிங் நாணயங்களை கொடுத்து பெண்ணிடம் 1 பவுன் நகையை மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-13 18:30 GMT

கைக்குழந்தையுடன்...

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நூத்தப்பூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பெரியம்மாள் (வயது 50). இவர் கடந்த 10-ந்தேதி மாலை பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஜவுளி கடையில் சேலை வாங்கி கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக பழைய பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெரியம்மாளிடம் சுடிதார் அணிந்த 23 வயது மதிக்கத்தக்க பெண் இடுப்பில் கைக்குழந்தையுடன் வந்து பெங்களூரு செல்ல வேண்டும். 5 பவுன் எடையுள்ள தங்க நாணயத்தை வைத்து கொண்டு ரூ.3 ஆயிரம் தாங்கள் என்று கேட்டுள்ளார்.

கவரிங் நாணயங்கள்

அதற்கு பணம் இல்லை என்று கூறிய பெரியம்மாளிடம் அந்த பெண் நாணயங்களை வைத்து கொண்டு காதில் அணிந்திருக்கும் தோடு, மாட்டலை கழற்றி கொடுங்கள் என்றார். பெரியம்மாளும் அந்த நாணயங்களை வாங்கி கொண்டு தனது காதில் அணிந்திருந்த ¾ பவுன் தங்க தோடு, ¼ பவுன் தங்க மாட்டலை கழற்றி அருகே இருந்த நகைக்கடையில் எடை போட்டு அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பெரியம்மாள் வீட்டில் சென்று பார்த்த போது அந்த பெண் கொடுத்த நாணயங்கள் கவரிங் நாணயங்கள் என்பது தெரியவந்தது.அந்த பெண் கவரிங் நாணயங்களை கொடுத்து ஏமாற்றி தன்னிடம் 1 பவுன் நகையை வாங்கி சென்றதை அறிந்த பெரியம்மாள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போஸ்ட் ஆபீஸ் தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு அந்த இளம்பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்