சேலத்தில் துணிகரம்:1¼ கிலோ தங்கத்திற்கு பதில் செம்பு கட்டி கொடுத்து மோசடி-நகைக்கடை உரிமையாளர் தலைமறைவு

சேலத்தில் 1¼ கிலோ தங்கத்திற்கு பதில் செம்பு கட்டி கொடுத்து மோசடி குறித்து தலைமறைவான நகைக்கடை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-12-21 23:00 GMT

நகைக்கடை

சேலம் செவ்வாய்பேட்டை மாதவராயன்செட்டி தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் லால்டூ. இவரது கடைக்கு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சீராச்சி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வரும் ஷேண்டோ வர்கீஸ் (வயது 39), அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர்கள் விஷ்ணு (30), நெல்சன் (29) ஆகிய 3 பேர் வந்தனர்.

அவர்கள் லால்டூவிடம் 1¼ கிலோ தங்க நகைகளை கொடுத்து அதற்கு பதில் தங்க கட்டிகளாக தரும்படி கூறியுள்ளனர். அவர்களிடம் 1¼ கிலோ எடையுள்ள 17 கட்டிகள் அடங்கிய ஒரு பார்சலை கொடுத்துள்ளார். அதை அவர்கள் பெற்றுக்கொண்டனர்.

வாக்கு வாதம் ஏற்பட்டது

பின்னர் ஷேண்டோ வர்கீஸ் மட்டும் லால்டூ கடையில் இருந்தார். மற்ற 2 பேர் தங்க கட்டிகள்தானா? என்று சிறிது தூரத்தில் உள்ள ஒரு கடையில் சோதித்து பார்த்தனர். அந்த கட்டிகள் அனைத்தும் தங்க முலாம் பூசிய செம்பு கட்டிகள் என்பது தெரிய வந்தது. இதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் ஷேண்டோ வர்கீசின் செல்போனில் தொடர்பு கொண்டு லால்டூ கொடுத்தது தங்க கட்டிகள் அல்ல. அவை அனைத்தும் செம்பு கட்டிகள் என்று கூறி உள்ளனர். ஷேண்டோ வர்கீஸ், செம்பு கட்டி கொடுத்து மோசடி செய்து உள்ளீர்கள் என்று லால்டூவிடம் கேட்டார். அப்போது அவர், நான் கொடுத்தது தங்க கட்டிகள்தான். நீங்கள் வெளியில் எடுத்து சென்று தங்க கட்டிகளை மறைத்துக்கொண்டு, செம்பு கட்டி என்று கூறுகிறீர்கள் என்று கூறி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

வழக்குப்பதிவு

இதையடுத்து லால்டூ நீங்கள் கொடுத்தது தங்க கட்டிகள் தானா? என்று பரிசோதனை செய்து வருகிறேன் என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்று விட்டார். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி கடைக்கு வரவில்லை.

பின்னர் இது குறித்து கேரள வாலிபர்கள் 3 பேரும் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் கூறியதாவது:-

பல்வேறு கோணங்களில் விசாரணை

கேரளாவை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கடைக்கு வந்து பார்த்த போது கடை உரிமையாளர் லால்டூ தலைமறைவாகி விட்டார். எனவே கேரள வாலிபர்கள் உண்மையில் தங்க நகைகள் தான் கொண்டு வந்தார்களா?, போலி நகைகள் கொண்டு வந்தார்களா? அல்லது தங்க நகைகளை பெற்றுக்கொண்டு செம்பு கட்டி கொடுத்து லால்டூ மோசடி செய்தாரா? என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

மேலும் லால்டூ எதற்காக கடையில் இருந்து தலைமறைவானார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர். இந்த துணிகர சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்